Wednesday, August 13, 2008

துன்பம் போன்றதோர் இன்பம்

பாவை போன்றதோர் பாவை- நான்
பாடித் திரிவது அவள் பார்வை
சாலைக் கருநிறக்கூந்தல்- அசைந்
தாட மயங்கிடும் ஏந்தல்

சீவித் தெறித்ததா தோள்கள்?- கனல்
சீறும் கண்களோ வாட்கள்!
கூவும் குரலதும் குயிலே-உன்
கூட வருவதார் மயிலே!

முத்து நிறத்திலே பற்கள்- சாயம்
முற்றும் உதடுகள் விற்கள்
நித்தம் ஒருநிறச் சட்டை- நெற்றி
நீறு பூசினாய் பட்டை!

என்ன விலையெனக் கேட்டாய் மாலை
ஏந்திக் கோயிலினுள் போட்டாய்
தன்னந் தனியனாய் பார்க்கும்- எனைச்
சற்றுத் திரும்பியே காப்பாய்!

கி.குருபரன்

ஒரு விண்ணப்பம்

செக்கல் வான வண்ணங்கொண்ட சிலையே கேளடி நீ
செல்லும் பாதை வழியைப்பார்த்து இங்கே நானடி
சிக்கலுற்ற நூற் பந்துபோல வாழலாகுமோ? –உன்
சிந்தனைக்கு தந்த எந்தன் காதல் வாழுமோ?

வேண்டும் வேண்டும் என்று சொல்லி மனது துடிக்குது
வேண்டாம் என்று சொல்லும் உன்னைக் கவிதை வடிக்குது
மீண்டும் மீண்டும் சுருங்கி விரியும் இதயம் போலவே – உன்
வீட்டு வாசல் வந்து போவேன் உன்னைக் காணவே!


பைத்தியங்கள் என்று நீயோ பழித்துப் பேசுறாய் - அதுவும்
பாவம் என்று இரக்கம் கொள்ள ஏனோ மறுக்கிறாய்?
வைத்தியங்கள் ஏதுமில்லை இந்த வருத்தத்தில்- மாறி
வாழுகின்ற ஆசையுண்டு உன் தாலிப் பொருத்தத்தில்!


கி.குருபரன்

Tuesday, August 12, 2008

வாழ்வின் எல்லை வரை வேண்டும் !

கற்றிருந்தோம் பள்ளியிலே ,கடினம் கண்டும்
களைப்பறியா எழுச்சியினைக் கற்றுக்கொண்டோம்
சுற்றி நிதம் வீதிகளைச் சுற்றி வந்தோம்-தெருச்
சுந்தரிகள் சிரிப்பினிலே சொக்கிச் சென்றோம்.

பள்ளிதனில் படிப்பதற்குச் சென்றோம் அங்கு மதில்
பாய்வதிலும் பெயரெடுத்த பயல்கள் ஆனோம்.
உள்ளதெல்லாம் நெய்து பல உணர்வுகொண்டோம்-எம்
ஊரினிலே நல்லவராய்க் காட்டிக் கொண்டோம்.

நண்பர்களே எங்களது ராஜா ராணி-
நாட்டிலுள்ள குடிகளதும் அவர்கள் தானே!
கண்ணசைக்க கதைமுடிக்கும் எங்கள் கோஷ்டி
கண்டவர்கள் நொல்லிடுவர் இதற்குச் சாட்சி!

இந்துவிலே வாழுங்காலம் இதயம் முட்டும்
இன்பங்களும் நெஞ்சினிலே கோடி எட்டும்
பந்தெறியின் சுவரடித்து பாதை மீளும்-நாமும்
பார்த்திருந்தோம் பள்ளி வாழ்வு என்று மீளும்????!

2000

விடை கொடு பல்கலையே!

இத்தனை நாள் எமைக்காத்து
ஈன்றவளே விடைகொடம்மா
முத்தியபின் உதிர்வதெல்லாம்
முன்பெல்லாம் நடந்ததுதான்!
பத்தினியாய் எமைவைத்துப்
பார்த்தவளே,இங்குவந்து
சத்தனைத்தும் பெற்றுயர்ந்தோம்
தந்ததவைக்கு நன்றியடி!

வாசிகசாலை தவிரவேறெதற்கும்
வந்ததில்லை என்றுசொல்லி
பேசுவாள் என்தோழி,
பின்னாளில் ளுவழநெ டிநnஉh இல்
ஆசைக்கு வந்திருக்காத
ஆளென்று எனைத்திட்டும்
வாசகர் நீர்மகிழ இன்றே
வந்தமர்வேன் கல்லணையில்!!


வளர்ந்த மரங்கண்டறிந்த
வரலாறு நூறிறிந்தும் இதனடியில்
வளர்ந்த எங்களை இவை
மறக்காமல் வைத்திருக்கும!;
தளர்ந்திருந்த வேளையிலே
தன்னடியில் உறுதிதந்து
வளங்கொழித்த எம்பீட
வாழ்வென்றும் மறக்காதே!!!

என் காது பறந்ததடி !

கந்தனது தம்பியின்வாய்
கண்டபடி கதைக்கும்-அதை
கந்தலின்றிக் கேட்டவர்கள்
காது ரொம்ப புளிக்கும்!

முந்திவரு கோபம் வர
மூளவொரு சண்டை-என்
முந்தலிலே தொடங்குவதா?-ஓம்
மூண்டதுவே சண்டை!

வந்தவர்கள் போனவர்கள்
வந்துநின்று பார்த்தார்
வாய்மொழியின் வேகத்திலே
வார்த்தைகளைச் சேர்த்தார்

தீர்ப்பதற்கு நான்புகுந்து
திருத்திவிடப் பார்த்தேன்
தீயவர்கள் வாய்க்கடியால்
தீர்ந்தது என் காது!

சண்டை ஒன்று கண்டால்யாரும்
தப்பும் வழி கண்டு-அதைத்
தள்ளி நின்று பார்ப்பதுதான்
ரொம்ப ரொம்ப நன்று!

குருபரன்