யாரதும் உதவியின்றித் தானாக வளர்ந்த மரம்
நேர் வெயில் தாங்கிக் கீழே நிழலாக நின்ற மரம்
ஊரது வாழவென்று ஓரமாய் நின்று கீழே
தேரென இடுப்பு விரிந்து தெருக்காட்சி தந்த மரம்
இரவில் மனிதன் வந்து இவளது மறைவில் நின்று
களவிலே சிறுநீர் கழித்தும் காக்கைகள் எச்சமிட்டும்
அருகிலே குப்பையாக்கி அருவருப்புச் செய்த போதும்
பொறுமையே பதிலாய்க் கொண்டு போதியை வென்ற மரம்!
நீரினை எங்கே காண? நிலத்திலே தானே சென்று
வேரினை நீட்டி வேட்கையில் தேடியபோது
தாரது போட்டு நிரவி தடுத்தானே மனிதன் நீரை!
ஆரிடம் சொல்லி அழவோ? ஆழமாய் வேருமில்லை!
பல்லினைக் கடித்து கடித்து பார்த்தது மரமும் ஈற்றில்
மெல்லவே பொறுமை எல்லை மீறவே கோபமாகி
சள்ளெனச் சத்தமிட்டு சரிந்தது தற்கொடைத் தாக்கு
உள்ளேதான் மாட்டுப் பட்டு உடைந்தது மனிதன் பொருளே!
31.05.2006
Thursday, October 16, 2008
Subscribe to:
Posts (Atom)