Thursday, October 16, 2008

தாங்க முடியாத சாவு!

யாரதும் உதவியின்றித் தானாக வளர்ந்த மரம்
நேர் வெயில் தாங்கிக் கீழே நிழலாக நின்ற மரம்
ஊரது வாழவென்று ஓரமாய் நின்று கீழே
தேரென இடுப்பு விரிந்து தெருக்காட்சி தந்த மரம்

இரவில் மனிதன் வந்து இவளது மறைவில் நின்று
களவிலே சிறுநீர் கழித்தும் காக்கைகள் எச்சமிட்டும்
அருகிலே குப்பையாக்கி அருவருப்புச் செய்த போதும்
பொறுமையே பதிலாய்க் கொண்டு போதியை வென்ற மரம்!

நீரினை எங்கே காண? நிலத்திலே தானே சென்று
வேரினை நீட்டி வேட்கையில் தேடியபோது
தாரது போட்டு நிரவி தடுத்தானே மனிதன் நீரை!
ஆரிடம் சொல்லி அழவோ? ஆழமாய் வேருமில்லை!

பல்லினைக் கடித்து கடித்து பார்த்தது மரமும் ஈற்றில்
மெல்லவே பொறுமை எல்லை மீறவே கோபமாகி
சள்ளெனச் சத்தமிட்டு சரிந்தது தற்கொடைத் தாக்கு
உள்ளேதான் மாட்டுப் பட்டு உடைந்தது மனிதன் பொருளே!

31.05.2006

Wednesday, August 13, 2008

துன்பம் போன்றதோர் இன்பம்

பாவை போன்றதோர் பாவை- நான்
பாடித் திரிவது அவள் பார்வை
சாலைக் கருநிறக்கூந்தல்- அசைந்
தாட மயங்கிடும் ஏந்தல்

சீவித் தெறித்ததா தோள்கள்?- கனல்
சீறும் கண்களோ வாட்கள்!
கூவும் குரலதும் குயிலே-உன்
கூட வருவதார் மயிலே!

முத்து நிறத்திலே பற்கள்- சாயம்
முற்றும் உதடுகள் விற்கள்
நித்தம் ஒருநிறச் சட்டை- நெற்றி
நீறு பூசினாய் பட்டை!

என்ன விலையெனக் கேட்டாய் மாலை
ஏந்திக் கோயிலினுள் போட்டாய்
தன்னந் தனியனாய் பார்க்கும்- எனைச்
சற்றுத் திரும்பியே காப்பாய்!

கி.குருபரன்

ஒரு விண்ணப்பம்

செக்கல் வான வண்ணங்கொண்ட சிலையே கேளடி நீ
செல்லும் பாதை வழியைப்பார்த்து இங்கே நானடி
சிக்கலுற்ற நூற் பந்துபோல வாழலாகுமோ? –உன்
சிந்தனைக்கு தந்த எந்தன் காதல் வாழுமோ?

வேண்டும் வேண்டும் என்று சொல்லி மனது துடிக்குது
வேண்டாம் என்று சொல்லும் உன்னைக் கவிதை வடிக்குது
மீண்டும் மீண்டும் சுருங்கி விரியும் இதயம் போலவே – உன்
வீட்டு வாசல் வந்து போவேன் உன்னைக் காணவே!


பைத்தியங்கள் என்று நீயோ பழித்துப் பேசுறாய் - அதுவும்
பாவம் என்று இரக்கம் கொள்ள ஏனோ மறுக்கிறாய்?
வைத்தியங்கள் ஏதுமில்லை இந்த வருத்தத்தில்- மாறி
வாழுகின்ற ஆசையுண்டு உன் தாலிப் பொருத்தத்தில்!


கி.குருபரன்

Tuesday, August 12, 2008

வாழ்வின் எல்லை வரை வேண்டும் !

கற்றிருந்தோம் பள்ளியிலே ,கடினம் கண்டும்
களைப்பறியா எழுச்சியினைக் கற்றுக்கொண்டோம்
சுற்றி நிதம் வீதிகளைச் சுற்றி வந்தோம்-தெருச்
சுந்தரிகள் சிரிப்பினிலே சொக்கிச் சென்றோம்.

பள்ளிதனில் படிப்பதற்குச் சென்றோம் அங்கு மதில்
பாய்வதிலும் பெயரெடுத்த பயல்கள் ஆனோம்.
உள்ளதெல்லாம் நெய்து பல உணர்வுகொண்டோம்-எம்
ஊரினிலே நல்லவராய்க் காட்டிக் கொண்டோம்.

நண்பர்களே எங்களது ராஜா ராணி-
நாட்டிலுள்ள குடிகளதும் அவர்கள் தானே!
கண்ணசைக்க கதைமுடிக்கும் எங்கள் கோஷ்டி
கண்டவர்கள் நொல்லிடுவர் இதற்குச் சாட்சி!

இந்துவிலே வாழுங்காலம் இதயம் முட்டும்
இன்பங்களும் நெஞ்சினிலே கோடி எட்டும்
பந்தெறியின் சுவரடித்து பாதை மீளும்-நாமும்
பார்த்திருந்தோம் பள்ளி வாழ்வு என்று மீளும்????!

2000

விடை கொடு பல்கலையே!

இத்தனை நாள் எமைக்காத்து
ஈன்றவளே விடைகொடம்மா
முத்தியபின் உதிர்வதெல்லாம்
முன்பெல்லாம் நடந்ததுதான்!
பத்தினியாய் எமைவைத்துப்
பார்த்தவளே,இங்குவந்து
சத்தனைத்தும் பெற்றுயர்ந்தோம்
தந்ததவைக்கு நன்றியடி!

வாசிகசாலை தவிரவேறெதற்கும்
வந்ததில்லை என்றுசொல்லி
பேசுவாள் என்தோழி,
பின்னாளில் ளுவழநெ டிநnஉh இல்
ஆசைக்கு வந்திருக்காத
ஆளென்று எனைத்திட்டும்
வாசகர் நீர்மகிழ இன்றே
வந்தமர்வேன் கல்லணையில்!!


வளர்ந்த மரங்கண்டறிந்த
வரலாறு நூறிறிந்தும் இதனடியில்
வளர்ந்த எங்களை இவை
மறக்காமல் வைத்திருக்கும!;
தளர்ந்திருந்த வேளையிலே
தன்னடியில் உறுதிதந்து
வளங்கொழித்த எம்பீட
வாழ்வென்றும் மறக்காதே!!!

என் காது பறந்ததடி !

கந்தனது தம்பியின்வாய்
கண்டபடி கதைக்கும்-அதை
கந்தலின்றிக் கேட்டவர்கள்
காது ரொம்ப புளிக்கும்!

முந்திவரு கோபம் வர
மூளவொரு சண்டை-என்
முந்தலிலே தொடங்குவதா?-ஓம்
மூண்டதுவே சண்டை!

வந்தவர்கள் போனவர்கள்
வந்துநின்று பார்த்தார்
வாய்மொழியின் வேகத்திலே
வார்த்தைகளைச் சேர்த்தார்

தீர்ப்பதற்கு நான்புகுந்து
திருத்திவிடப் பார்த்தேன்
தீயவர்கள் வாய்க்கடியால்
தீர்ந்தது என் காது!

சண்டை ஒன்று கண்டால்யாரும்
தப்பும் வழி கண்டு-அதைத்
தள்ளி நின்று பார்ப்பதுதான்
ரொம்ப ரொம்ப நன்று!

குருபரன்

Friday, July 4, 2008

வாணி விழா கவி அரங்கு

இங்கே சென்று பாருங்கள் ( கீழே உள்ள முகவரியை கிளிக் பண்ணுங்கள் )
http://kaviarangu.blogspot.com/

Thursday, May 8, 2008

எதிர்பார்ப்பு

broad ligament பார்ப்பம் எனப் போனேன்
போம் ஐ சே male body இது என்றாய்
vas diferens காட்டு என் கேட்க -சும்மா
வாரும் இது female என சொன்னாய்

axilla வை பார்த்தபடி நிற்க நீயோ
accessory nerve இன் course கேட்டாய்
breast lobe இல் மினக்கெட்டு வாழ்வை
வீணாக்கிப் போட்டன் என சொன்னாய்

testis இல்லா scrotum போல மூளை
சூனியமாய் இருக்கிறது கண்ணே
spincter இல்லா bladder போல - ஞானம்
தேக்கம் இல்லை மனதின் உள்ளே காணோம்

pect major போலிருப்பாய் எதிர் பார்த்தேன்
platisma போல எல்லோ ஆனாய்
atropyஆவதுவா என் வாழ்க்கை
ஆரணங்கே காட்டு உன் heart ஐ !

2001

இயற்கை இதம்

தூரத்தில் இருந்தாலும் நிலவு
சுகத்தை தான் தருகிறது
அருகில் இருப்பவர்கள் என்
அடித்துக் கொள்கிறார்கள்?

கதைக்கும் போது காற்று
என்னால் நன்கு கஷ்டப் படுகிறது - ஆனால்
தென்றல் என்னை கோபித்ததே இல்லை !

எத்தனை பேரை பார்த்திருந்தாலும்
Seniority கொண்டாடாத இறைவன் ...
எனக்குப் பிடித்திருக்கிறது !

யாருக்காகவோ பூக்கள் பூக்கின்றன
நான் ரசித்துக்கொண்டு இருக்கிறேன்
வண்டுகளுக்கு வழிவிட்டு !

அழகுக்காக எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்
அழகு என்பது என்ன?
அது என் ஆராய்ச்சி!

மாலை நேர வானம்
வர்ணங்களின் கோலம்
மாயை என்கிறார்கள்
என்றாலும்
மகிழ்ச்சியாக இருக்கிறது !

குளிக்கும் போது பார்ப்பதில்
எவ்வளவு சந்தோசம்
சூரியன் கடலில்!

நட்சத்திர பெண்கள் கண் சிமிடிக் கொண்டிருக்கிறார்கள்
விடிந்த பிறக்கும் கூட!
எனக்கு தெரியவில்லை !

மழைத் துளியை பார்த்திருக் கிறீர்களா?
அதன் குண்டான கன்னங்கள்
எனக்கு விருப்பம் !

மழையில் நனைந்ததால் காய்ச்சல் வரும்
சின்ன வயதில் டீச்சர் சொல்லித் தந்தவ !

இலங்கை படம் கீறுகிற உழுவான்
எனக்கு அப்போது அட்சர ரேகை பற்றி
தெரியாது !

எறும்பு உடலில் ஊரும் போது
வருகிற கூச்சம்
நான் எறும்பை தட்டுவதில்லை
பாதை தடையால்
பாதிக்கப் பட்டவன் நான்!

குடிக்கும் நேரத்தை தவிர
சுருட்டி வைத்து கொள்கிறது
வண்ணத்துப் பூச்சி
என்னால் மட்டும் முடியுதில்லை !


10.02.2001

Wednesday, March 12, 2008

ஓட்டை வாய்

மனதிலே உள்ள எல்லாம்
வாயிலே வடிவதாலே
அளப்பரும் துன்பம் சேரும்
அனுபவம் கண்டு கொண்டேன்

மறைப்பினை நீக்கி நெஞ்சு
மடையினை திறத்தல் போல
உறைப்பொடு காரம் சேர
உள்ளதை உளறி வைத்தேன்

விருப்போடு கேட்பரேனும்
வெறுப்புடன் நோக்குவாரும்
நினைப்பதை பற்றி நானும்
நினைத்துமே பார்ப்பதில்லை !

உள்ளது எல்லாம் உளறும்
ஓட்டை வாய் என்று பலரும்
வள்ளல் போல் தந்த பட்டம்
வாங்கலால் பட்டதாரி !

கண்டதை பேசி நாட்டில்
கலகத்தை உண்டு பண்ணில்
தண்டனை என்று சொல்ல
தாழினை பூட்டிக் கொண்டேன் !

26.05.2000

உதுவும் treatment ஓ?

தினமும் நான் உன்னை நினைப்பதும்
தெருவில் விழி வைத்து கிடப்பதும்
மனதில் கலக்கங்கள் வருவதும்
மடியின் சுகம் பெற திரிவதும்

பெடியன் மெலியுறான் எனவுமே- முட்டைப்
பொரியல் அம்மா தருவதும் ...
அடியேன் மனதிலே கவலைகள்
அடியே உனக்கது தெரியுமோ ?

கனவில் பல மணி களித்தலும் -நான்
Chunningham படிப்பதை நிறுத்தலும்
உணவில் விருப்பினை குறைத்தலும் -வாய்
உளறி கதையினை உரைத்தலும்

விசரன் என பலர் சொல்கிறார்
விடை நீ தருவதில் தயக்கம் ஏன் ?
வருத்தம் சிலதுக்கு மருந்துகள்
வழங்கும் அவசியம் இல்லையோ ?

01.12.2000