Wednesday, March 12, 2008

ஓட்டை வாய்

மனதிலே உள்ள எல்லாம்
வாயிலே வடிவதாலே
அளப்பரும் துன்பம் சேரும்
அனுபவம் கண்டு கொண்டேன்

மறைப்பினை நீக்கி நெஞ்சு
மடையினை திறத்தல் போல
உறைப்பொடு காரம் சேர
உள்ளதை உளறி வைத்தேன்

விருப்போடு கேட்பரேனும்
வெறுப்புடன் நோக்குவாரும்
நினைப்பதை பற்றி நானும்
நினைத்துமே பார்ப்பதில்லை !

உள்ளது எல்லாம் உளறும்
ஓட்டை வாய் என்று பலரும்
வள்ளல் போல் தந்த பட்டம்
வாங்கலால் பட்டதாரி !

கண்டதை பேசி நாட்டில்
கலகத்தை உண்டு பண்ணில்
தண்டனை என்று சொல்ல
தாழினை பூட்டிக் கொண்டேன் !

26.05.2000

No comments: